பாகிஸ்தான் அணியை பந்தாடிய இந்தியா- 5 விக்கெட்டுகள் வீழ்த்தி குல்தீப் யாதவ் அபாரம்

Estimated read time 1 min read
Spread the love

5 விக்கெட்டுகள் வீழ்த்தி குல்தீப் யாதவ் அபாரம்: பாகிஸ்தான் அணியை பந்தாடிய இந்தியா..!!

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி 228 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை சுவைத்தது.
கொழும்பு,16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றுக்கு தகுதி கண்டுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.இந்த நிலையில் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேற்று முன்தினம் பலப்பரீட்சையில் குதித்தன.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் சர்மா (56 ரன்), சுப்மன் கில் (58 ரன்) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர்.3-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல், விராட் கோலியுடன் இணைந்தார். 24.1 ஓவர்களில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அப்போது விராட் கோலி 8 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மழை மறுபடியும் பெய்ததால் ஆட்டத்தை மேற்கொண்டு தொடர முடியாது என்று நடுவர்கள் அறிவித்தனர்.

தாமதமாக தொடக்கம்

இந்த ஆட்டத்துக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் பாதியில் நின்று போன ஆட்டம் நேற்று பிற்பகல் 3 மணிக்கு விட்ட நிலையில் இருந்து தொடங்கி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்றும் மழை பெய்ததால் 1 மணி 40 நிமிடம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. தசைப்பிடிப்பு காரணமாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் களம் இறங்கவில்லை. லோகேஷ் ராகுல், விராட்கோலி தொடர்ந்து பேட்டிங் செய்தனர்முதலில் சற்று நிதானத்தை கடைப்பிடித்த லோகேஷ் ராகுல், விராட்கோலி போகப்போக பாகிஸ்தான் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து வேகமாக ரன் சேர்த்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். 33-வது ஓவரில் 200 ரன்னை எட்டிய இந்தியா 45-வது ஓவரில் 300 ரன்களை தொட்டது.

ராகுல், கோலி சதம்

இப்திகர் அகமது, ஷதப்கான் பந்து வீச்சில் தலா ஒரு சிக்சர் தெறிக்கவிட்ட லோகேஷ் ராகுல் 100 பந்துகளில் தனது 6-வது சதத்தை பூர்த்தி செய்தார். காயத்தில் இருந்து மீண்டு நேரடியாக அணிக்கு திரும்பிய லோகேஷ் ராகுல் மார்ச் மாதத்துக்கு பிறகு களம் இறங்கிய தனது முதல் ஆட்டத்திலேயே தனது பார்ம் குறித்து எழுந்த விமர்சனத்துக்கு சரியான பதிலடி கொடுத்தார்.மறுமுனையில் நிலைத்து நின்று பிரமாதமான ஒரு இன்னிங்சை வெளிப்படுத்திய விராட்கோலி, இப்திகர் அகமது, நசீம் ஷா பந்து வீச்சில் சிக்சர் விரட்டியதுடன் 84 பந்துகளில் சதத்தை எட்டினார். சர்வதேச ஒருநாள் போட்டியில் அவர் ருசித்த 47-வது சதம் இதுவாகும். இதில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த 3 சதங்களும் அடங்கும். கடைசி வரை இந்த கூட்டணியை உடைக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் துவண்டு போனார்கள்.

இந்தியா 356 ரன்கள் குவிப்பு

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தங்களது முந்தைய அதிகபட்ச ஸ்கோரை இந்தியா சமன் செய்தது. விராட்கோலி 122 ரன்னுடனும் (94 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்), லோகேஷ் ராகுல் 111 ரன்னுடனும் (106 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 10 ஓவர்களில் மட்டும் 105 ரன்கள் விளாசி அமர்க்களப்படுத்தினர். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 233 ரன்கள் திரட்டினர். பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஜோடி எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும்பின்னர் 357 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக நுழைந்த இமாம் உல்-ஹக் (9 ரன்), ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் (10 ரன்) ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சில் போல்டு ஆனார். 11 ஓவர்களில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

வீழ்ந்தது பாகிஸ்தான்

வீழ்ந்தது பாகிஸ்தான்
வீழ்ந்தது பாகிஸ்தான்

மறுபடியும் ஆட்டம் தொடங்கிய போது குலதீப் யாதவ் சுழல் ஜாலத்தால் மிரட்டினார். அவரது பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. அதிகபட்சமாக பஹர் ஜமான் 27 ரன்னும், இப்திகர் அகமது, ஆஹா சல்மான் தலா 23 ரன்னும் எடுத்தனர்.32 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் 128 ரன்னில் அடங்கியது. ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா காயத்தால் பேட் செய்யவில்லை. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 200 ரன்னுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி காண்பது இதுவே முதல் முறையாகும். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 8 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.சூப்பர்4 சுற்றில் முதல் வெற்றியை பெற்றுள்ள இந்தியா அடுத்து இலங்கையுடன் இன்று (பிற்பகல் 3 மணி) மோதுகிறது. சூப்பர் சுற்றில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் கடைசி லீக்கில் இலங்கையை வீழ்த்தினால் தான் (14-ந்தேதி) இறுதிப்போட்டி குறித்து நினைத்து பார்க்க முடியும்.

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours