உங்கள் தலைமுடி உதிர்வதைத் தடுக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருள்கள்
நாம் உண்ணும் உணவு நம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் அன்றாடம் உண்ணும் உணவு, நமது தோல் மற்றும் முடி பளபளப்பையும் பாதிக்கிறது. ஒருவருக்கு முடி உதிர்கிறது என்றால், அது சாதாரண விஷயமல்ல. நம்முடைய தலைமுடி அளவுக்கு அதிகமாக உதிர்கிறது என்றால், நம் உடலில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதற்கான முதல்கட்ட அறிகுறியே முடி உதிர்தல். அதை நாம் எப்போதும் அலட்சியம் செய்யக்கூடாது. பல நாட்களாக இருக்கும் மன அழுத்தம், மரபியல், நமது உடல் ஹார்மோனில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அல்லது சில மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்ற பல்வேறு காரணிகளால் முடி உதிர்தல் ஏற்படலாம். நமது தலைமுடியைப் பாதிக்கும் காரணிகளை அறிந்துகொள்வதோடு, எளிய வகையில், எப்படி முடி உதிராமல் பராமரிப்பது என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.
புரதங்கள்(Proteins), வைட்டமின் பி (Vitamin B), இரும்பு(Iron), துத்தநாகம் (Zinc) போன்ற தாதுக்கள் நிறைந்த சில உணவுகள் ஆரோக்கியமான கூந்தலுக்கு மிகவும் முக்கியம். அனோரெக்ஸியா(anorexia) (பசியின்மை) மற்றும் புலிமியா(bulimia ) (அதிகமாகச் சாப்பிடுவது) போன்ற மருத்துவ உடல்நிலைகள் நம் முடி உதிர்வதற்கான காரணிகளில் ஒன்று. நமக்கு முடி உதிர்வு ஏற்படுவதற்கான குறிப்பிட்ட உணவுப் பழக்கமும், காரணிகளும் என்ன என தெரிவாகத் தெரியாது. ஆனால், எடுத்துக்காட்டாக, சர்க்கரைகள் மற்றும் கொழுப்புகள் உள்ள உணவுப் பண்டங்கள், இதய நோய்க்கு மட்டுமல்ல, நமது செல்களில் மன அழுத்தம் மற்றும் வீக்கத்திற்கும் காரணமாக உள்ளன. இதனால், நமது உடல் அதிக உணர்திறன் மிக்கதாக மாறி, அசெளகரியங்களை ஏற்படுத்துகிறது. இந்த வகை உணவுகளை உண்பதால், நமக்கு முடி உதிர்வும் ஏற்படும்.
இந்தக் காரணத்திற்காகவே தற்போது முடி உதிர்வுக்காக வழங்கப்படும் மருத்துவ ஆலோனைகள் அனைத்தும் பெரும்பாலும், அழற்சி எதிர்ப்பு விளைவுகளில் கவனம் செலுத்துகின்றன. எனவே, முடி உதிர்வைக் கட்டுப்படுத்த, மீன் மற்றும் பிஞ்சு விதைகளில் இருந்து தயாராகும் ஆலிவ் எண்ணெய் போன்ற அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வீக்கத்தை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்ப்பது முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். பல ஆய்வுகளும் அந்தக் கருத்தை ஆதரிக்கின்றன. உதாரணமாக, அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த மத்திய தரைக்கடல் உணவை (புதிய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொட்டைகள், விதைகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவு) பின்பற்றுவது, முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
மன அழுத்தம், நம் உடலின் கோர்ட்டிசோல் ஹார்மோனின்(cortisol hormone ) அளவை அதிகரிக்கிறது. இந்த ஹார்மோனின் வெளியீடு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், பிரச்னைகள் ஏற்படும். இன்றைய சூழலில், மன அழுத்தம் என்பது நமது வாழ்வில் மிகவும் சாதாரணமாகிவிட்டது. இந்த மன அழுத்த நிலைகள் நீண்ட நாட்கள் தொடர்ந்தால், முடி உதிர்தல் பிரச்னை தொடங்கும். அட்ரீனல் சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் கோர்ட்டிசோல் ஹார்மோன் முடி உதிர்வதற்கான முக்கிய காரணியாக உள்ளது. மன அழுத்தம் குறையும்போது, உடலில் இந்த ஹார்மோனின் அளவு இயல்பு நிலைக்குத் திரும்பும். உணவின் மூலம் இந்த ஹார்மோன் உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழுலாம். நிச்சயமாக முடியும்.
கோர்ட்டிசோல் ஹார்மோனை திசுக்களில் எண்ணெய் மிகுந்திருக்கும் மீன் வகைகள், சில வகையான விதைகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் மற்றும் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தலாம். புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்குதான் நமது குடலில் உள்ள மைக்ரோபயோட்டா எனப்படும் நுண்ணுயிரிகளின் (microbiota) பங்கு முக்கியமானது. மைக்ரோபயோட்டா(microbiota) என்பது நமது செரிமான அமைப்பில் உள்ள நுண்ணுயிர்களின் குழுக்கள். நாம் ஆரோக்கியமாக இருப்பதிலும், நாோயால் பாதிக்கப்படுவதிலும் மைக்ரோபயோட்டாவின் பங்கு உள்ளது. மைக்ரோபயோட்டாவிற்கும் நாம் உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்கும் தொடர்பு உள்ளது.
நாம் உண்ணும் உணவைப் பொறுத்து நமது உடலில் உள்ள மைக்ரோபயோட்டா வேறுபடுகிறது. நமது வளர்சிதை மாற்றம் (metabolism) மற்றும் ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் நம் உடலின் மாற்றம் ஆகியவை நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது. அவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்து, பல்வேறு ரசாயன, வளர்சிதை மாற்ற சமிக்ஞைகள் உடலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை மன அழுத்தத்தைச் சமாளிக்கவும் உதவும். நமது உணவு முறை மாறுபட்டால், குடலில் உள்ள பாக்டீரியாக்களும் மாறுகின்றன. எனவே, தயிர் போன்ற புரோபயாடிக்குகளை(probiotics) மற்ற புளித்த உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்வது முடியின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். இவற்றைப் பின்பற்றி வந்தால் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். இந்த கட்டுரையின் ஆசிரியர் பிலார் அர்ஜென்டோ அரிசோனா, சான் ஜார்ஜ் பல்கலைக்கழகத்தில் சுகாதார அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.