
prajin
சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘சமூக விரோதி’ .இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டன.
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,திராவிட இயக்க அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்,மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி,ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த குணாஜி,தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன்,நடிகர்கள் லொள்ளு சபா ஜீவா,இமான் அண்ணாச்சி, விஜய் விஷ்வா,சௌந்தரராஜா, சந்திரசேகரா,சிங்கப்பூர் தொழில் ஆலோசகர் ஜவஹர் அலி,படத்தின் இயக்குநர் சியோன் ராஜா, கதாநாயகன் பிரஜின்,டிஃபெண்டர் வழக்கறிஞர்கள் எம்.தாமோதரகிருஷ்ணன்,எம்.கோகுல கிருஷ்ணன், நடிப்புப் பயிற்சியாளர் ஜெயராவ்,முதலீட்டாளர்கள் விஜயராகவன், சாய் சரவணன், விவேக்,சதீஷ், தொழிலதிபர் நாமக்கல் சின்ன மருது, தமிழ்நாடு மாணவர் இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி, தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சித்ரா முரளிதரன்,படத்தின் ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி, இசையமைப்பாளர் மாலக்கி,கலை இயக்குநர் முஜிபுர் ரகுமான் ,நிர்வாகத் தயாரிப்பாளர் வினோ ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்கள்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த குணாஜி பேசும்போது,
” இந்த நாட்டின் சமூக விரோதிகள் யார் தெரியுமா ?” என்று தொடங்கியவர் ரஜினி, கமல், விஜய் என்று அனைத்து நடிகர்களையும் குற்றம் சாட்டினார் .மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்காத இவர்கள் சமூக விரோதிகள் தான் என்று அவர் பேசியதைத் தொடர்ந்து நடிகர் சௌந்தரராஜா பேசினார். அப்போது “எதற்கெடுத்தாலும் திரைப்பட நடிகர்களைக் குற்றம் சாட்டுவதை முதலில் நிறுத்துங்கள். அவர்கள் மக்களை மகிழ்ச்சியூட்டுவதற்காகப் படங்களில் நடிக்கிறார்கள். சம்பளம் பெறுகிறார்கள். எதற்கெடுத்தாலும் ஏன் அவர்களை உள்ளே இழுத்துக் கொண்டு வருகிறீர்கள்?” என்றார்.அதன் பிறகு இந்த நிகழ்ச்சி வாதப்பிரதிவாதங்களால் வெப்பமடைந்து பரபரப்பாகி சூடேறியது.அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசும்போது ,”நான் குமரி மண்ணில் இருந்து சென்னைக்கு இந்தப் படத்தை வாழ்த்துவதற்காக வந்தேன்.படத்தின் இயக்குநர் சியோன் ராஜா நிறைய வாசிக்கிறவன், அது மட்டும் அல்ல நிறைய யோசிக்கிறவன். இன்று சாதாரண உப்புக்கல்லாகத் தெரிகிற சியோன் ராஜா இந்தப் படத்திற்குப் பின் வைரமாக மாறுவான்.
இங்கே ஒருவர் அறச்சீற்றத்தை வெளிப்படுத்திப் பேசினார். பொதுவெளியில் பேசும்போது யார் மனமும் புண்படாத வகையில் பேசுவது நாகரிகம் ஆகும். சமூக விரோதி எங்கிருக்கிறான்? நம்மிடையே தான் இருக்கிறான்.இங்கே தீவிரவாதிகள் சமூக விரோதிகள் என்பதற்கு வேறு வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன.மாவோ என்றாலே இங்கே அஞ்சுகிறார்கள் .அவன் யார் என்பதைப் பற்றி யாருக்கும் அரசியல் அறிவு கிடையாது. வரலாற்றினைப் படித்தது கிடையாது. அவன் மக்களுக்காக 6000 மைல் பயணம் சென்றவன். லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகப் படை திரட்டியவன் மாவோ.அவன் யுத்தம் செய்தது சர்வாதிகார சாம்ராஜ்யத்திற்கு எதிராக மட்டுமல்ல போதை கலாச்சாரத்துக்கு எதிராகவும்தான். அபின் நிறைந்த கப்பலைக் கொளுத்தி அழித்து மக்களைத் தீய பழக்கத்திலிருந்து காத்தவன்..அதனால்தான் வரலாற்றில் அது அபினியுத்தம்
எனப்படுகிறது.மாவோ பெயர் என்றாலே தீவிரவாதியாகப் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தான் அவர்களின் புரிதல் இருக்கிறது.இந்தப் படத்திற்காக இயக்குநர் சீயோன் ராஜாவும் கதாநாயகன் பிரஜினும் பட்ட பாடுகளை நான் அறிவேன். அவர்களின் தொடர் ஓட்டத்தை நான் கவனித்து இருக்கிறேன். அது ஒரு சிலுவைப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் டிஜிபி மோகன்தாஸ் காவல்துறைக்கு சங்கம் வைக்க வேண்டும் என்று கூறினார். அதற்காகக் காவல்துறையினர் போராடினார்கள் அவர்களை ஒடுக்குவதற்கு எம்.ஜி.ஆர் ராணுவத்தை வரவழைத்துப் பயன்படுத்தினார் .போராடியவர்கள் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்கள் .குற்றம் சம்பந்தமான புலனாய்வு அறிக்கையில் மற்ற மாதங்களை விட காவல்துறையினர் சிறையில் இருந்த அந்த ஒரு மாதம் தான் கொலை , கொள்ளை குற்றங்கள் நடக்காமல் குறைவாக இருந்தது. இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறதா யார் சமூக விரோதிகள் என்று. இந்த சமூக விரோதி படம் மூலம் புரட்சியை ஏற்படுத்துகிறாரோ இல்லையோ இயக்குநர் சீயோன் ராஜா ஓர் அதிர்வை ஏற்படுத்துவார் என்று கூறி படக்குழுவினரை வாழ்த்துகிறேன் “என்றார்.