
prajin
இந்தப் படத்திற்காக இயக்குநர் சீயோன் ராஜாவும் கதாநாயகன் பிரஜினும் பட்ட பாடுகளை நான் அறிவேன் – நாஞ்சில்
அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசும்போது ,
“நான் குமரி மண்ணில் இருந்து சென்னைக்கு இந்தப் படத்தை வாழ்த்துவதற்காக வந்தேன். படத்தின் இயக்குநர் சியோன் ராஜா நிறைய வாசிக்கிறவன், அது மட்டும் அல்ல நிறைய யோசிக்கிறவன். இன்று சாதாரண உப்புக்கல்லாகத் தெரிகிற சியோன் ராஜா இந்தப் படத்திற்குப் பின் வைரமாக மாறுவான். இங்கே ஒருவர் அறச்சீற்றத்தை வெளிப்படுத்திப் பேசினார். பொதுவெளியில் பேசும்போது யார் மனமும் புண்படாத வகையில் பேசுவது நாகரிகம் ஆகும். சமூக விரோதி எங்கிருக்கிறான்? நம்மிடையே தான் இருக்கிறான்.இங்கே தீவிரவாதிகள் சமூக விரோதிகள் என்பதற்கு வேறு வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன.மாவோ என்றாலே இங்கே அஞ்சுகிறார்கள் .அவன் யார் என்பதைப் பற்றி யாருக்கும் அரசியல் அறிவு கிடையாது. வரலாற்றினைப் படித்தது கிடையாது. அவன் மக்களுக்காக 6000 மைல் பயணம் சென்றவன். லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகப் படை திரட்டியவன் மாவோ.அவன் யுத்தம் செய்தது சர்வாதிகார சாம்ராஜ்யத்திற்கு எதிராக மட்டுமல்ல போதை கலாச்சாரத்துக்கு எதிராகவும்தான். அபின் நிறைந்த கப்பலைக் கொளுத்தி அழித்து மக்களைத் தீய பழக்கத்திலிருந்து காத்தவன்..அதனால்தான் வரலாற்றில் அது அபினியுத்தம் எனப்படுகிறது.மாவோ பெயர் என்றாலே தீவிரவாதியாகப் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தான் அவர்களின் புரிதல் இருக்கிறது. இந்தப் படத்திற்காக இயக்குநர் சீயோன் ராஜாவும் கதாநாயகன் பிரஜினும் பட்ட பாடுகளை நான் அறிவேன். அவர்களின் தொடர் ஓட்டத்தை நான் கவனித்து இருக்கிறேன். அது ஒரு சிலுவைப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் டிஜிபி மோகன்தாஸ் காவல்துறைக்கு சங்கம் வைக்க வேண்டும் என்று கூறினார். அதற்காகக் காவல்துறையினர் போராடினார்கள் அவர்களை ஒடுக்குவதற்கு எம்.ஜி.ஆர் ராணுவத்தை வரவழைத்துப் பயன்படுத்தினார் .போராடியவர்கள் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்கள் .குற்றம் சம்பந்தமான புலனாய்வு அறிக்கையில் மற்ற மாதங்களை விட காவல்துறையினர் சிறையில் இருந்த அந்த ஒரு மாதம் தான் கொலை , கொள்ளை குற்றங்கள் நடக்காமல் குறைவாக இருந்தது. இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறதா யார் சமூக விரோதிகள் என்று. இந்த சமூக விரோதி படம் மூலம் புரட்சியை ஏற்படுத்துகிறாரோ இல்லையோ இயக்குநர் சீயோன் ராஜா ஓர் அதிர்வை ஏற்படுத்துவார் என்று கூறி படக்குழுவினரை வாழ்த்துகிறேன் “என்றார்.
இமான் அண்ணாச்சி பேசும்போது,
” இன்று ஒரு படம் வெற்றியடைய வேண்டும் என்றால் இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று படத்தில் புகைப்பிடிக்கும் காட்சி இருக்க வேண்டும்,இன்னொன்று கெட்ட வார்த்தைகள் பேச வேண்டும். அது இரண்டுமே இதில் உள்ளது. எனவே இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும்” என்றார்.