“கருமேகங்கள் கலைகின்றன படத்திலும் வெட்டு குத்து இருக்கிறது” ; கவுதம் வாசுதேவ் மேனன்
இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குனர்கள் கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், யோகிபாபு, அதிதி பாலன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்..ஏகாம்பரம் ஒளிப்பதிவு, லெனின் படத்தொகுப்பு, மைக்கேல் கலை வடிவமைப்பு செய்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். செப்டம்பர் 1ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், ஆர்.வி உதயகுமார், பிரமிட் நடராஜன், அதிதி பாலன், மஹானா சஞ்சீவ், விபின்லால், நிஜந்தன், பேபி சாரல், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், படத்தொகுப்பாளர் லெனின், கலை இயக்குனர் மைக்கேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பேசும்போது,
“நான் என்னை இன்னும் ஒரு நடிகராக பார்க்கவில்லை. இந்த கதை எனக்கு பிடித்திருந்தது. அது மட்டுமல்ல பாரதிராஜாவின் மகனாக நடிக்க வேண்டும் என்று சொன்னதுமே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். எடிட்டர் லெனினின் வெட்டு, பாரதிராஜா என் மீது விட்ட குத்து என இந்த படத்திலும் வெட்டு, குத்து இருக்கிறது.. படத்தில் பாரதிராஜா என்னை ஒரு காட்சியில் அடிக்க வேண்டும்.. பலமுறை அடிப்பதற்கு தயங்கி நின்றார். அப்போது அவரிடம் எப்போதாவது நான் உங்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி இருப்பதாக நினைத்துக்கொண்டு என்னை அடியுங்கள் என்று கூறினேன். நிஜமாகவே அடித்துவிட்டார்.. அடுத்து தங்கர் பச்சான் என்ன கதை சொன்னாலும் நான் கேட்பேன்.. அவர் படத்தில் நடிப்பேன்” என்று கூறினார்.இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசும்போது, “தங்கர் பச்சான் ஒரு நல்ல எழுத்தாளர். 25 வருடங்களுக்கு முன் தங்கர் எழுதிய குருஞ்நாவலான “கருமேகங்கள் ஏன் கலைகின்றன” புத்தகத்தை நான் தான் வெளியிட்டேன். தங்கர் பச்சான் இந்த கதையை சொன்ன விதம், இதில் என்னை வடிவமைத்த விதம் அற்புதமாக இருந்தது. இது ஒரு அரிதான சந்தர்ப்பம். நான் பெரும்பாலும் பெண்களின் கண்களைத் தான் ரசித்து அவர்களுக்கு குளோசப் காட்சிகள் வைப்பேன். அதை தாண்டி தான் ரசித்தது என்றால் கவுதம் மேனனின் கண்களைத்தான். அவரது கண்கள் மட்டும் தான் பேசும்.. ஒரு காட்சியில் அதிதியின் காலில் விழ வேண்டும். நடிப்பு என வந்துவிட்டால் எதையும் பார்க்க கூடாது.
எந்த விழாவிலும் இத்தனை வருடங்களில் எடிட்டர் லெனினை பார்த்ததில்லை.. இன்று பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.. இது குழந்தை சாரலின் நடிப்பு மிக அற்புதம். அவளது கண்களே பேசும். யோகிபாபு இந்த படத்தை ஆக்கிரமித்து விட்டார். அவர் ஏற்றுள்ள அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துவிட்டார். திரைப்பட வரலாற்றில் சில படங்கள் தான் வருடக்கணக்காக பேசப்பட்டு வரும் .நாகரிகமாக எடுக்கப்பட்ட சினிமா. குடும்ப உறவுகளுடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று கூறினார்.
+ There are no comments
Add yours