20 லட்சம் ரூபாய் நிதியை வழங்கிய ஓசூர் மாமன்ற உறுப்பினர் – நமக்கு நாமே திட்டம்
நமக்கு நாமே திட்டத்திற்கு 20 லட்சம் ரூபாய் சொந்த நிதியை மாநகர மேயரிடம் வழங்கிய ஓசூர் மாமன்ற உறுப்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜூஜூவாடி 2- வது வார்டு பகுதியில் உள்ள மாருதி நகர் மற்றும் பி டி ஆர் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்ற முடியாமல் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அங்குள்ளவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர்.மேலும் அது சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ள பகுதி என்பதாலும் அங்கு குத்தகைக்கு எடுத்து செயல்படும் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை இந்தக் கழிவு நீர் வெளியேற்றுவதற்கு இடையூறாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதற்கான தீர்வு காண பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் மாநகராட்சியினரால் அங்கு தீர்வு ஏற்படுத்த இயலாத சூழல் நிலவியது.

இதனை கருத்தில் கொண்டு அந்த வார்டு பகுதியின் மாமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் தேர்தலின் பொழுது இந்த பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வு ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.இதனைக் கருத்தில் கொண்ட அவர் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நமக்கு நாமே திட்டம் வாயிலாக இதற்கான தீர்வை நிரந்தரமாக ஏற்படுத்தித் தர ஏதுவாக மொத்தம் 40 லட்சம் ரூபாய் செலவாக உள்ள நிலையில், பாதி தொகையான 20 லட்சம் ரூபாயை தனது சொந்த நிதியிலிருந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு வழங்க தீர்மானித்தார்.
அதன்படி, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ் ஏ சத்யாவிடம் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வரைவோலையை மாமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் வழங்கினார். இதனைப் பெற்றுக் கொண்ட மாநகர மேயர், தீர்வை ஏற்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.இதனால் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் கழிவு நீர் வெளியேற்றுவதற்கு சிரமப்பட்டு வந்த குடியிருப்பு வாசிகளுக்கு தீர்வு ஏற்படும் என்பதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
+ There are no comments
Add yours