
m
அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் ‘மாயவலை’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு
நடிகர் தீனா பேசியதாவது…
நான் நிறையப்படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு சீன், இரண்டு சீன் தான் நடிப்பேன், வெற்றிமாறன் அண்ணன் தான் அதை மாற்றினார். அவருடன் ‘வட சென்னை‘யில் நிறைய கற்றுக்கொண்டேன். நான் ஸ்டண்ட் மேன் கிடையாது, துணை நடிகர் தான், எனக்கு நடிப்பு கற்றுக்கொள்ள ஆசை. கூத்துப்பட்டறை போன்ற இடங்களில் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் வெற்றிமாறன் சார் படத்தில் நடித்ததே பெரிய அனுபவமாக இருந்தது. அதே போல் தான் அமீர் அண்ணன். இருவரும் எனக்கு நிறைய சொல்லித் தந்தார்கள். உண்மையாகவே அமீர் எனக்கு அண்ணன் தான். என்னைக் குடும்ப உறுப்பினர் போல பார்த்துக்கொள்வார். இந்தப்படத்தில் பணியாற்றிய எல்லோரும் நண்பர்கள் தான். மிக நன்றாக படம் வந்துள்ளது, அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள், நன்றி.
பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது…
நானும் அமீர் சாரும் இணைந்து பணிபுரிந்து பல நாட்கள் ஆகி விட்டது, நாங்கள் இணைந்த அனைத்து பாடல்களும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன, இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன், எங்கள் படம் என்பதற்காக சொல்லவில்லை, இப்படம் பெரிய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். அமீர் சார் இந்தப் படத்தில் அழகாய் நடித்தது மட்டுமில்லாமல் மிக அழகாகவும் இருக்கிறார். பல ஆண்டுகள் அவருடன் பணியாற்றி வருகிறேன், இந்த பந்தம் மென்மேலும் தொடரும் என்று நம்புகிறேன். இயக்குநர் வெற்றிமாறன் இங்கு இணைந்துள்ளது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய பலம், அவரது ஆசீர்வாதம் எங்களுக்கு மிக முக்கியம், அவருக்கு எங்களது நன்றி. இந்தப் படம் மக்களிடையே ஒரு ஆழமான விதையை விதைக்கும் என்று நம்புகிறேன், உங்கள் ஆதரவை இந்தப் படத்திற்கு கொடுங்கள், நன்றி.
இணை தயாரிப்பாளர் ராஜேந்திரன் பேசியதாவது…
என் முதல் மேடை இது, இந்த வாய்ப்பை தந்த அமீர் அண்ணனுக்கு நன்றி. அமீர் அண்ணாவும் நானும் தீவிரமான கமல் ரசிகர்கள். எப்போதும் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம், அமீர் அண்ணனிடமும் கமல் சாரிடமும் என்னைக் கொண்டு சேர்த்த சினேகனுக்கு நன்றி. இந்தப்படம் பற்றி எனக்குத் தெரியாது. அமீர் அண்ணனுடன் பயணிக்க வேண்டும், அவ்வளவுதான். அமீர் அண்ணனும் வெற்றிமாறன் அண்ணனும் இணைந்து ‘நார்கோஸ்’ மாதிரி ஒரு சீரிஸ் எடுக்க வேண்டும், அதில் நாங்களும் இருக்க வேண்டும். அது நடக்கும் என நம்புகிறேன், அனைவருக்கும் நன்றி.