
i
மாலத்தீவு கடலோரக் காவல்படையினால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய உறுதி அளித்த கனிமொழி கருணாநிதி எம்.பி
இன்றுதூத்துக்குடி தருவைகுளத்தில், மாலத்தீவு கடலோரக் காவல்படையினால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினரை திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 12 மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தார். மாலத்தீவு சென்றுள்ள தமிழ்நாடு ஆழ்கடல் விசைப்படகு மீன்பிடி சங்கத் தலைவர் அந்தோணி ஜெயபாலனை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்புகொண்டு 12 மீனவர்களின் தற்போது நிலைமையைக் கேட்டு அறிந்தார்.
எல்லாத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று (27/10/2023) கனிமொழி எம்.பி தனது X தள பக்கத்தில் “எனது தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட தருவைகுளத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது மாலத்தீவு கடலோரக் காவல்படையினால் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் விரைந்து தலையிட்டு நமது மீனவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியிலிருந்து அதே பகுதியைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது படகில், கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி ஆழ்கடலுக்கு விக்னேஷ், உதயகுமார், மைக்கேல்ராஜ், செல்வசேகரன், அந்தோணி கிறிஸ்டோபர், பரலோக திரவியம், அன்பு, ஆதிநாராயணன், மகேஷ் குமார், மாதேஷ் குமார், மணி, சக்தி ஆகிய 12 பேர் மீன்பிடிக்கச் சென்றார்கள்.
இவர்கள் மீன்பிடித்துவிட்டுக் கடந்த 23 ஆம் தேதி மாலத்தீவு கடல் பகுதி வழியாகக் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மாலத்தீவு கடற்படையினர், அத்துமீறி மாலத்தீவு கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி, அவர்கள் 12 பேரையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.