
HOSUR
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் வரும் 25ம் தேதி மாநிலம் தழுவிய கதவடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு. – ஓசூரில், ஹோஸ்டியா சங்கத் தலைவர் மூர்த்தி பேட்டி.
தமிழகத்தில் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின் கட்டணம் உயர்வு காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தொழில் நிறுவனங்களின் சங்கங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஓசூர் சிறு மற்றும் குறு தொழிற்சங்கங்களின் தலைவர் மூர்த்தி தெரிவிக்கையில்,
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின் கட்டளை உயர்வு காரணமாக சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இழப்பை சந்தித்து வருகின்றன. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோர் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை அளித்த போதிலும் மின் கட்டண உயர்வு திரும்ப பெறப்படவில்லை.இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு தொழில் நடத்தி வரும் அனைத்து நிறுவனங்களும் உள்ளடக்கிய தொழில் அமைப்புகள் மற்றும் மாநில அமைப்பான டான்ஸ்டியா அமைப்புடன் இணைந்து ஆலோசனை மேற்கொண்டு, கொடிசியா, மடிசியா, ஹோஸ்டியா, ஹோஸ்மியா உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவன சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், வரும் 25ஆம் தேதி திங்கட்கிழமை மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 3 லட்சம் சிறு குறு மற்றும்
நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ள இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் 2000 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படும்.
எனவே முதலமைச்சர் இதில் உரிய கவனம் செலுத்தி உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்ப பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட பழைய மின் கட்டண முறையையே பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்… என கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.