
HOSUR (1)
விநாயகர் சிலை விவகாரத்தில் அத்துமீறிய காவல்துறை மீது நடவடிக்கை கோரி, ஓசூரில் சிவசேனா சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்.

நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி திருநாள் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி பல்வேறு பொது இடங்களில் விநாயகர் சிலை அமைப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு அரசு சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் வா. களத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபட்ட நிலையில், உரிய அனுமதி பெறாமல் சிலையை அமைத்திருப்பதாக கூறி விநாயகர் சிலையை காவல் துறையினர் அகத்தியர் போது ஏற்பட்ட பிரச்சனையில் பெண்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, தாமாக முன்வந்து பெண்கள் காவல்துறையினர் வாகனத்தில் ஏறிய பின்பு வாகனத்தில் வைத்து பெண்களை மிகவும் தரக்குறைவாக நடத்தியதாகவும், பெண்களின் பிறப்புறுப்பில் தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் வாட்ஸ் அப் வாய்ஸ் ரெக்கார்ட் மூலம் அவருடைய உறவினர்களுக்கு செய்தி அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பெண்களை மானபங்கப்படுத்தும் வகையில் ஆடைகளைப் பிடித்து இழுத்தும், தகாத வார்த்தைகளால் காவல்துறையினர் திட்டி அத்துமீறியதாக கூறப்படுகிறது.
இது பற்றிய வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களிலும் பரவி வருவதாக கூறி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சிவசேனா கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் எம் எம் முரளி மோகன் தலைமையில் அக்கட்சியினர், இது போன்ற மனித உரிமை மீறல்களில் அத்துமீறி நடந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுக்களை, குடியரசுத் தலைவர், மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோருக்கு, ஓசூர் தபால் நிலையத்தில், தபால் மூலம் அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.