
D
டெவில் திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா
இசை விமர்சகர் ஷாஜி பேசும் போது, “இன்று இந்த மேடையில் மிஷ்கினை ஒரு இசையமைப்பாளராக பார்ப்பது எனக்கு எந்தவித ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை. ஏனென்றால் என்னை பொருத்தவரை மிஷ்கின் எப்பொழுதுமே இசையோடு இருப்பவர் தான். அவருக்கும் எனக்குமான முதல் அறிமுகமே அவர் இரண்டு படங்கள் எடுத்தப் பின்னர், ஒரு இசை குறித்த விவாதத்துடன் தான் தொடங்கியது. மிஷ்கின் ஒரு பைத்தியக்காரர் போல 24 மணி நேரமும் வெஸ்டர்ன் க்ளாசிக் இசையினை கேட்டுக் கொண்டே தான் இருப்பார். திடீரென்று நள்ளிரவு மூன்று மணிக்கு போன் செய்து, இந்தப் பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா..? என்று பேசத் துவங்குவார். பெரும்பாலும் நாம் தமிழ்ப்பாடல்கள் தான் கேட்போம்,. ஆனால் அவருக்கு பழைய இந்தி பாடல்கள் மீதும், மைனஸ் ஸ்கேல் இசையின் மீதும், இளையராஜா இசையின் மீதும் மிகப்பெரிய அபிமானம் உண்டு. அப்படி ஒரு Intensive- ஆன மியூசிக் listener. நானும் ஒரு மியூசிக் listener தான், ஆனால் என்னால் வாழ்நாளில் கண்டிப்பாக இசை அமைக்க முடியாது. அதற்கு ஒரு பெரிய டெடிகேஷன் தேவைப்படுகிறது. கொரோனா காலக்கட்டத்தில் எனக்கு போன் செய்து, கல்கத்தாவில் இருந்து ஒரு ஹார்மோனியம் வாங்க வேண்டும். எப்படி வாங்குவது என்று கேட்டார். நான் ட்ரிபிள் ரீட் ஹார்மோனியம் வாங்கலாம் மிஷ்கின், ஆனால் இந்த காலகட்டத்தில் எப்படி வாங்குவது என்று தயங்கினேன். ஆனால் அவர் அதை வாங்கிக் காட்டினார். அதையும் அவர் அலுவலகத்தில் இருக்கும் ஒரு மியூசிக்கல் பியானோவையும் வைத்து பயிற்சி செய்து கொண்டே இருப்பார் எப்பொழுதும். எனவே இசையின் அவர் இன்னும் ஆழமாகப் போககூடியவர் தான். அதனால் தான் இந்த வயதில் கூட ஒரு மாஸ்டரை வைத்துக் கொண்டு இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை கற்று வருகிறார்.
அது போல் உலகளவில் சார்லி சாப்ளின், வூடி ஆலன், க்ளைண்ட் ஈஸ்ட்வுட் மற்றும் டேவிட் லின்ச் போன்ற இயக்குநர்கள் இசையமைப்பாளராகவும் மாறி இருக்கிறார்கள். அது ஒரு நீட்சி என்றே நான் கருதுகிறேன். அது போல் இயக்குநர் ஆதித்யாவின் சவரக்கத்தி படத்தில் ஒரு பைத்தியமாக நடித்தேன். டெவில் படத்தில் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பாதிரியார் ஆக நடித்திருக்கிறேன். இரண்டு கதாபாத்திரத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் நான் திருமணம் செய்து வைத்தப் பின்னர் தான் இந்த கூத்தெல்லாம் நடக்கிறது என்பதைப் பார்க்கும் போது குற்றவுணர்வாக இருக்கிறது. ஆதித்யா மிஷ்கினின் தம்பி என்பதற்காக இந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் வரைக்கும் ஆதித்யா மிஷ்கினின் தம்பி என்பதே எனக்குத் தெரியாது. இது அவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ”என்று பேசினார்.
”டெவில்” படத்தின் தயாரிப்பாளர் இராதாகிருஷ்ணன் பேசும் போது, “இந்த இசை வெளியீட்டிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் வணக்கங்கள். இந்தப் படத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும் என்று எண்ணிணோம். ஆரம்ப காலகட்டங்களில் பாய் என்பவரும் பின்னர் எங்கள் நண்பர் ஹரியும் எங்களோடு இணைந்ததால் இப்படத்தை சிறப்பாக தயாரித்துள்ளோம். இசை அமைக்க ஒத்துக் கொண்ட இயக்குநர் மிஷ்கினுக்கு நன்றி. இப்படத்திற்கு ஆதரவு அளித்து வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் ஆதித்யா பேசும் போது, “இப்படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டு ஒரு இக்கட்டான தருணத்தில் நான் இருந்த போது, சேகர் மூலமாக தயாரிப்பாளர்
ராதாகிருஷ்ணன் என்னை அணுகி இரண்டு இலட்சம் ரூபாய்கான செக்கை வழங்கினார். படப்பிடிப்பிற்கான பணிகளை துவங்கினோம். பிறகு தயாரிப்பு பணிகளில் ஹரி சாரும் தன்னை இணைத்துக் கொண்டார். தயாரிப்பாளர்கள் இப்படம் சிறப்பாக உருவாக எல்லா வகைகளிலும் உதவினார்கள் அவர்களுக்கு நன்றி. நான் முதலில் எழுதிய கதையை இயக்குநர் மிஷ்கினிடம் கொடுத்தேன். அவர் இந்தக் கதை நல்ல கதை தான். ஆனால் முதலில் நீ “அன்னாகரீனா”வைப் படி என்று கொடுத்தார். அது கிட்டத்தட்ட 600 பக்கம் இருக்கும். பின்னர் தேவி பாரதி எழுதிய சிறுகதையை வாசித்தேன். அது என்னை மிகவும் பாதித்தது. பின்னர் படத்திற்குள் பூர்ணா, விதார்த், அருண் என ஒவ்வொருவராக வந்தார்கள். பூர்ணா இப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இப்பட உருவாக்கத்தில் உற்ற துணையாக இருந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு ஆதரவு அளியுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.