தங்கர் பச்சானுக்கு ‘செல்லுலாய்டு சிற்பி’ பட்டம் சூட்டிய ஆர்.வி.உதயகுமார்

இந்த நிகழ்வில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,
“கிழக்கே போகும் ரயில் படத்தின் படப்பிடிப்பில் சிறுவனாக இருந்தபோது நான் கேட்ட பாரதிராஜாவின் அதே குரல் இன்றும் மாறவில்லை. இப்போதும் மிகச்சிறந்த படத்தை என்னால் கொடுக்க முடியும் என்கிற துணிச்சல் அவருக்கு மட்டுமே உண்டு. அவரது படைப்புகள் இப்படித்தான் என யூகிக்க முடியாதபடி இருக்கும். கோவணம் கட்டிய கமலுக்கு கோட் சூட் போட்டு படம் எடுத்தார். இப்போது திடீர் திடீரென மருத்துவமனைக்கு சென்று விடுவார்.. நாங்கள் எல்லாம் கவலையுடன் அவரை போய் பார்க்கும் போது அடுத்த படத்திற்காக கதையை தயார் செய்து கொண்டு இருப்பேன் என்று கூறி ஆச்சரியப்படுத்துவார். இயக்குநர் தங்கர்பச்சான் என்னுடைய படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்த்துள்ளார்.
அப்போதே என்ன படம் எடுக்கிறார் என்று என்னை திட்டுவார். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.. எப்போதும் தனது குணாதிசயத்தை சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பவர்..
பாரதிராஜாவை வைத்து படம் எடுக்க போகிறேன் என்று சொன்னபோது அவர் உடல்நிலை சரிப்பட்டு வருமா என்று விசாரித்துக் கொள்ளுங்கள் என கூறினேன். ஆனால் படம் பார்த்த பிறகு தான் இந்த கதையில் அவரைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்கிற எண்ணம் தோன்றியது. அதிதி பாலனின் நடிப்பை பார்த்த போது படம் இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என்கிற உணர்வு ஏற்பட்டது. தங்கர் பச்சானுக்கு ‘செல்லுலாய்டு சிற்பி’ என்கிற பட்டத்தை சூட்டுகிறேன். தங்கருக்கு ஆங்கிலம் பிடிக்கவில்லை என்றால் அதை தமிழில் மாற்றி வைத்துக் கொள்ளட்டும்.. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சாரல் பிறவி நடிகை என்று சொல்லும் விதமாக அற்புதமாக நடித்துள்ளார்” என்றார்.
நடிகை மஹானா சஞ்சீவ் பேசும்போது,
“இந்த படத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் ஒரே இயக்குநர்களாகவே இருக்கின்றனர். இத்தனை பேருடன் இணைந்து நடித்தது பெருமையாக இருக்கிறது.

நிறையபடங்கள் பண்ண வேண்டும். கருமேகங்கள் கலைகின்றன படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும்” என்றார்.
நடிகை அதிதி பாலன் பேசும்போது, “அருவி படத்தில் நடித்த போது சினிமா துறையில் இல்லாத ஆட்களுடன் சேர்ந்து பணி புரிந்தேன். ஆனால் இப்படத்தில் உடன் நடித்த அனைவருமே ஜாம்பவான்களாக இருந்தனர். பாரதிராஜாவிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். தங்கர் பச்சான் இப்படத்திற்காக என்னை அழைத்தபோது எனக்கு ‘அழகி’ தான் ஞாபகம் தான் வந்தது. அவர் சொன்ன கதையை கேட்டதும் இந்த கதாபாத்திரத்தை என்னால் பண்ணி விட முடியுமா என்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் இயக்குநர் தங்கர் பச்சான் என்னை கன்வின்ஸ் செய்து அழகாக அந்த கதாபாத்திரமாக மாற்றி நடிக்க வைத்தார்” என்று கூறினார்.
+ There are no comments
Add yours