விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

Estimated read time 1 min read
Spread the love

நாட்றம்பள்ளி அருகே அதிகாலை கோர விபத்து வேன் மீது மினி லாரி மோதி 7 பெண்கள் பலி: 10 பேர் படுகாயம்

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே அதிகாலை பஞ்சராகி நின்ற சுற்றுலா வேன் மீது மினி லாரி மோதியதால் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஓணாங்குட்டை ஊராட்சி பகுதியை சேர்ந்த 48 பேர் கடந்த 8ம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள கோயில்களுக்கு 2 வேன்களில் சுற்றுலா சென்றனர். நேற்று முன்தினம் இரவு தர்மஸ்தலாவிற்கு சென்று, சுவாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். 9 ஆண்கள், 15 பெண்கள் என 24 பேர் பயணம் செய்த வேன், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சண்டியூர் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வந்தபோது பின்பக்க வலதுபுற டயர் திடீரென பஞ்சரானது.

இதனால் டிரைவர் வேனை சாலையோரம் நிறுத்தினார். அதில் இருந்த 15 பெண்கள் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து சரக்குகளை இறக்கிவிட்டு சென்னை நோக்கி வந்த ஒரு மினி லாரி, பஞ்சராகி நின்றிருந்த வேனின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தடுப்பு சுவர் மீது அமர்ந்திருந்த பெண்கள் மீதும் லாரி மோதியது. இதில் ஓணாங்குட்டை பகுதியை சேர்ந்த தேவகி (50), சாவித்ரி (42), கலாவதி (50), கீதாஞ்சலி (35), தெய்வானை (32), செல்வி (55), மீரா (50) ஆகிய 7 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் சத்யா (30), வைஷ்ணவி (28), சியாமளா (50), தனஜெயன் (35), ரவி (42), சண்முகம் (48), வேன் டிரைவர் சதீஷ்கு மார் (30), மினி லாரி டிரைவரான சென்னையை சேர்ந்த அருணாச்சலம் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அதிகாலை நேரம் என்பதால் விபத்து குறிந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு உடனடியாக தெரியவில்லை. சுற்றுலா சென்றதில் மற்றொரு வேனில் பின்னால் வந்து கொண்டிருந்தவர்கள், விபத்து நடந்திருப்பதை கண்டு கீழே இறங்கி பார்த்தனர். அப்போதுதான் 7 பெண்கள் இறந்து கிடப்பதும், 10 பேர் படுகாயமடைந்திருப்பதும் தெரியவந்தது. உடனடியாக நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தகவல் அறிந்த அமைச்சர் எ.வ.வேலு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சடலங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உறவினர்களிடம் ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தேசிய நெடுஞ்சாலைகளில் வெளிச்சம் இல்லாத பகுதிகளில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து நடந்த இடத்தில் பிளாக் ஸ்பாட் அடிப்படையில் விபத்து பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் மற்றும் அபாயகரமான இடம் என பெயர் பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். கலெக்டர் பாஸ்கரபாண்டியனும் காயமடைந்தவர்களை பார்பையிட்டு ஆறுதல் கூறினார்.

* கணவன், குழந்தைகள் கண் முன் இறந்த பெண்
விபத்தில் உயிர் தப்பிய பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த ரஞ்சித் கூறுகையில், ‘வேன் டயர் பஞ்சரானதால் எனது மனைவி கீதாஞ்சலி வண்டியை விட்டு கீழே இறங்கி சென்றார். அடுத்த 10 நிமிடத்தில் லாரி வந்து வேன் மீது மோதியது. அப்போது நானும் எனது மகன் முகேஷ் (14), மகள் சைலஜா (11) ஆகியோர் மட்டுமே வேனில் இருந்தோம். லாரி மோதியதில் நானும் எனது பிள்ளைகளும் ஷீட்டுக்கு அடியில் மாட்டிக்கொண்டோம். சிறிதுநேரம் கழித்து வேனில் இருந்து கீழே சென்று பார்த்தபோது தடுப்பு சுவரில் அமர்ந்திருந்த அனைத்து பெண்களும் உடல் நசுங்கி சிதறி கிடந்தனர். எனது மனைவி உயிருக்குபோராடிய நிலையில் அழுதார். சில நிமிடங்களில் எனது பிள்ளைகள் மற்றும் என் கண்ணெதிரே எனது மனைவி உயிரிழந்தார். இதை பார்த்த நாங்கள் கதறி துடிதுடித்தோம்’ என்றார்.

* உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வேன் மீது லாரி மோதி 7 பெண்கள் உயிரிழந்த துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும், சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours