கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000- 1.06 கோடி பெண்கள் தேர்வு

Estimated read time 1 min read
Spread the love

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம் ரூ.1000 பெறும் 1.06 கோடி பெண்கள் தேர்வு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் அனைவரின் பாராட்டை பெறும் திட்டமாக செயல்படுத்தி காட்ட வேண்டும். இந்த திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உரிய நேரத்தில் திட்டத்தின் பயன் மக்களை சென்றடைய வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அது குறித்தான ஆய்வு கூட்டம் முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இறுதி ஆலோசனையை நடத்தினார். இக்கூட்டத்தில், தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வளர்ச்சி ஆணையர் முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலாளர் தாரேஸ் அகமது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட சிறப்புப் பணி அதிகாரி இளம்பகவத், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதன்பின்னர் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் தொடக்க விழா வரும் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைச்சர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் இதுதான். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் ரூ.1000 மாதந்தோறும் ஆண்டு முழுவதும் பெறப்போகிறார்கள். அதிகப்படியான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டமாகவும், அதிகப்படியான பயனாளிகள் உள்ளடக்கிய திட்டமாகவும் இது அமைந்துள்ளது. இதனை வெற்றிகரமாக நடத்தி காட்டும் பொறுப்பும் கடமையும் அதிகாரிகளாகிய உங்களுக்கு இருக்கிறது.அதேபோல, ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெறுகிறார்கள் என்பதால் கிடைக்கின்ற பாராட்டு, ஒரு கோடி பாராட்டுகளுக்கு சமம். மேலும், இதில் சிறு தவறு நடந்துவிட்டால், அதனால் கிடைக்கும் கெட்டபெயரும், என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

அதேபோல, தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரும் செப்.15ம் தேதி முதல் கிடைக்கும் வகையில் நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இத்தகைய தகுதி பெற்ற குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும். ஏ.டி.எம். கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்க வேண்டும்.ஆனால் ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படக் கூடாது; அதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல், வரும் 15ம் தேதி, என்னுடைய சார்பில் மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில், பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய கட்டணமில்லா எண்ணும் சேர்க்க வேண்டும்.இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. இதில், தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர். அப்படியானால் மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும். அப்படி அனுப்பினால் பெரும்பாலானவர்கள் மனநிறைவு அடைவார்கள். சிலருக்கு சந்தேகங்கள் இருக்கலாம். மறுபடியும் நம்மிடம் விண்ணப்பிப்பார்கள். அவர்களுக்கும் அத்தகைய வாய்ப்பை நாம் வழங்க வேண்டும். வாய்ப்பை வழங்கினால் பொதுமக்களுக்கு அரசின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும்.

வரும் 15ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் இதற்கான விழா நடக்க இருக்கிறது. பணம் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியாக வருவார்கள். பணம் கிடைக்காத மகளிர் யாராவது அந்த இடத்துக்கு வந்து கேட்டால், பதில் சொல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தனியாக இதற்கென அதிகாரிகளை உட்கார வைத்து, இப்படி கேட்க வரும் மகளிரிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி, ‘நாங்கள் பரிசீலிக்கிறோம்’ என்பதைச் சொல்லி அனுப்பி வைக்க வேண்டும். இது மிகமிக முக்கியமாகும். இதைச் செய்யாவிட்டால், ஏதாவது ஒரு இடத்தில் பிரச்னை என்றாலும், அது மாநிலம் முழுவதும் பெரிய செய்தியாக மாறிவிடும். அதனால் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.அதேபோல, மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும், இந்த திட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசுக்கும் வங்கிகளுக்கும், வங்கிகளுக்கும் பொதுமக்களுக்குமான தொடர்பு சீராக அமைந்து வருகிறதா என்பதை மாதம் தோறும் கண்காணிக்க வேண்டும். மாதத்தில் முதல் ஒருவார காலம் இந்த திட்டத்துக்காக தனிக் கவனம் செலுத்த வேண்டும் . மேலும், ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் மாபெரும் திட்டம் இது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர் மாதம் தோறும் பயனடையும் திட்டம் இது. எனவே, இத்திட்டம் குறித்து தொடர்ந்து நாம் மக்களிடம் எடுத்துச்சொல்லி வர வேண்டும்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours