மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

Estimated read time 1 min read
Spread the love

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று மாநில அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கும் போது பேசிய கருத்துக்களை திரித்தும் சிதைத்தும் ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரம் விஷமப் பிரச்சாரம் செய்து வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் துவங்கி பாஜகவின் நட்டா, அண்ணாமலை வரை ஒரே குரலில் பொய்யுரைக்கின்றனர். பொய் புகார்களையும் இந்துத்துவா அமைப்பினர் பல்வேறு மாநிலங்களில் கொடுத்து வருகின்றனர்.இந்த மாநாடு இந்து மதத்திற்கு எதிராக நடத்தப்படவில்லை. மாறாக, சனாதனம், மநு நீதி, வர்ணாசிரமம் என்ற பெயரில் காலம் காலமாக திணிக்கப்படும் சாதிய மேலாதிக்கம், பெண்ணடிமைத் தனம், மூடநம்பிக்கை போன்றவற்றை எதிர்த்தே நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பகுத்தறிவாளர்கள் மட்டுமல்ல ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்களும் பங்கேற்று உரையாற்றியுள்ளனர். சனாதனக் கருத்தியல் எவ்வாறு இறை நம்பிக்கை கொண்ட மக்களையும் பிரித்து வைத்து மேலாதிக்கம் செய்கிறது என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.கர்நாடக மாநிலம், தேவதாசி முறை ஒழிப்பு சங்கத்தைச் சேர்ந்த தலைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்று மதத்தின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளை எடுத்துரைத்துள்ளார்.சனாதன கருத்தியலுக்கு எதிரான கருத்தியல் போர் என்பது கௌதம புத்தர் துவங்கி, சித்தர்கள், ராமானுஜர், வள்ளலார், நாராயண குரு, வைகுண்டசாமிகள், அய்யன்காளி, பசவண்ணா, ஜோதிபா பூலே என காலம் காலமாக நடந்தே வந்துள்ளது.நம்முடைய அரசியல் சாசனம் இந்திய மக்கள் அனைவரும் சமமானவர்கள் என்றும் பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை என்றும் உறுதியாக பிரகடனம் செய்கிறது. இந்திய அரசியல் சாசனத்தின் பெயரால் பதவியேற்றுக் கொண்டுள்ள அமித்ஷா, நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் சமத்துவத்துக்கு எதிரான கருத்தியலுக்கு ஆதரவளிப்பது அரசியல் சட்டத்திற்கு முரணானது ஆகும்.இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, மக்களை சாதி ரீதியாக பிரித்து தனித்தனியாக இருக்க வேண்டும் என்று சொன்னதுதான் சனாதனம் என்றும், மணிப்பூர் மாநிலத்தில் சொந்த மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டிவிட்டுள்ளனர் இதுதான் சனாதனம் என்றும் விஸ்வகர்மா திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவருவதில் ஒரு சதி உள்ளது. குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் முயற்சி இது என்றும் பேசியுள்ளார்.பாசிஸ்ட்டுகள் நம்முடைய குழந்தைகளை படிக்கவிடாமல் செய்ய என்ன வழி என்று யோசித்து அதற்காகத்தான் இந்தத் திட்டத்தை கொண்டு வருகின்றனர் என்றும் நாம் படித்துவிடக்கூடாது என்பதுதான் சனாதனக் கொள்கை என்றும் பேசியுள்ளார்.ஆனால், கிறிஸ்தவ, இஸ்லாமிய, சிறுபான்மையினரையும், பட்டியலின பழங்குடி மக்களையும் மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் இனப்படுகொலை செய்யும் ஒரு கூட்டம் இந்துக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் தூண்டிவிடுவதாக பொய்யைப் பரப்புகின்றனர்.மனு தர்ம ஆட்சியை மீண்டும் கொண்டுவரத் துடிக்கும் சங்பரிவாரத்தினர் மக்களை பிளவுபடுத்தி தங்களது வாக்கு வங்கி அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர் என்பதற்கு ஏராளமான சாட்சியங்கள் உள்ளன.நரேந்திர மோடி தலைமையிலான கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்குலைவு நடவடிக்கைகளால் இந்துக்கள் உட்பட அனைத்து இந்திய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வாலும், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்ற நடவடிக்கைகளாலும் அனைத்து பகுதி மக்களையும் தண்டித்துள்ளது ஒன்றிய அரசு.நிலவுடமையைப் பாதுகாக்கவும், மன்னராட்சி முறையை நியாயப்படுத்தவும் உருவாக்கப்பட்ட சனாதனம் உள்ளிட்ட பிற்போக்கு தத்துவங்களை இன்றைக்கும் பயன்படுத்தி கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கும், சுரண்டலுக்கும் துணை நிற்கிறது ஆர்எஸ்எஸ் பாஜக பரிவாரம்.ஊழல், விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்சனைகளில் சிக்கித் திணறி தோல்வி பயத்தில் உள்ள பாஜக இந்திய மக்களை திசைதிருப்புவதற்காக தன்னுடைய வழக்கமான பொய்ப்பிரச்சாரத்தை மீண்டும் துவக்கியுள்ளது. தாம் எந்தவொரு மதத்திற்கும் எதிராகவும் பேசவில்லை. நான் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவுபடுத்திய பிறகும் மாநாட்டில் பேசாத ஒன்றை திரித்து பாஜகவினர் மேற்கொள்ளும் பொய்ப்பிரச்சாரம் தோல்வியடையும் என்பது உறுதி.பாஜகவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஆத்திரத்தில் சங்பரிவாரத்தினர் மேற்கொள்ளும் விஷமப் பிரச்சாரத்தை இந்திய மக்கள் நிராகரிப்பார்கள். மதச்சார்பற்ற அரசியலை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் பாஜகவினரின் அழிவு சித்தாந்தத்தை முறியடிப்போம்.

(கே. பாலகிருஷ்ணன்)

மாநில செயலாளர்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours