கோயம்பேடு காய் கனி மலர் உணவு தானிய அனைத்து ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சங்கம்
கோயம்பேடு வணிக வளாகத்தை சீர் செய்ய கடந்த ஆண்டு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் சாலை, குடிநீர், மின்சாரம், வாகன நிறுத்துமிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதாக கோயம்பேடு காய், கனி, மலர், உணவு தானிய அனைத்து ஒருங்கிணைந்த கூட்டமைப்பு பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது
கோயம்பேடு வணிக வளாகத்தை திருமழிசைக்கு தமிழக அரசு மாற்றப் போவதாக வெளியான செய்தி குறித்து சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் கோயம்பேடு காய், கனி, மலர், உணவு தானிய அனைத்து ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். சங்கத்தின் தலைவர் ராஜசேகரன் பேசும்போது, கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தை திருமழிசைக்கு மாற்றும் எண்ணம் அரசிடம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். இதனை சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிர்வாக உறுப்பினர் அன்சூல் மிஸ்ரா தெரிவித்ததாக கூறினார்.
தொடர்ந்து பேசிய சங்கத்தினர், கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கடந்த ஆண்டு 20 கோடி ரூபாய் தமிழக அரசு நிதி ஒதுக்கியதாகவும், ஆனாலும் வணிக வளாகத்தை சுற்றியுள்ள சாலைகள், வணிக வளாகத்தில் அடிக்கடி ஏற்படும் மின்சார தடை, குடிநீர் இணைப்பு, வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாமல் தொடர்ந்து அவதிப்படுவதாக வேதனை தெரிவித்தார். ஒதுக்கிய 20 கோடி ரூபாய் நிதியை, மரக்கிளைகளை வெட்டுவதற்கும், மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகாமல் இருக்கும் வகையில் சிமெண்ட் பூச்சு செய்யும் வகையில் பணிகளை செய்ததாகவும் தமிழக அரசு கணக்கு காண்பிப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்.
மேலும் கோயம்பேடு வணிக வளாகத்தில் கொட்டப்படும் காய்கறி கழிவுகளை கொண்டு, மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதாகவும், அவற்றை விரைவாக நடைமுறைப்படுத்தினால் கோயம்பேடு வணிக வளாகத்துக்கு ஏற்படும் மின் தட்டுப்பாட்டை போக்க முடியும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். லட்சக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தை பிற இடத்துக்கு மாற்றுவதற்கு ஒரு வியாபாரி கூட அனுமதி அளிக்க மாட்டார்கள் என்றும், மீறி செய்படுத்த முயன்றால் பெரும் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
+ There are no comments
Add yours